தற்போது 2019 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரின் 45 - ஆவது லீக் ஆட்டமான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று, 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி, 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, ஐந்து தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.எனவே, இவ்விரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறும் ஆடும் அவனை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் :
பட்லர் இல்லாத காரணத்தினால் பேட்டிங்கில் ரஹானே, சாம்சன் மற்றும் ஸ்மித்தை பெரிதும் நம்பியுள்ளது,ராஜஸ்தான் அணி. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், இளம் வீரரான ரியான் பராகின் சிறப்பான ஆட்டம், ராஜஸ்தான் அணிக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. ராஜஸ்தான் மண்ணில் 150 முதல் 160 ரன்கள் எடுப்பது நல்ல ஸ்கோர் ஆகும். பந்துவீச்சில் ஆர்ச்சர், கோபால் போன்றோர் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தால் :
இந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ உலகக் கோப்பை தொடருக்காக நாடு திரும்பியது, ஐதராபாத் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிஸ் பாண்டே மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆரஞ்ச் நிற தொப்பியை தன் வசம் வைத்திருக்கும் டேவிட் வார்னர், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், ஷகிப் அல் ஹசன், யுசுப் பதான் ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியில் வெல்லப் போவது யார்?
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் மிடில் ஆர்டரில் சொதப்பி வருகிறது, முதல் மூன்று வீரர்களையே பெரிதும் நம்பியுள்ளது. சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி, ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.