நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இவ்விரு அணிகளும் மோதும் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணியை தோற்கடிக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த பின்னர், வெற்றிகளை குவித்து ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முன்னர், இவ்விரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை அணியை தோற்கடித்து இருந்தது. எனவே, இன்றைய போட்டியில் அதே உத்வேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஒருவேளை இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோற்றால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைக்கும்.
மறுமுனையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று கணிசமான அளவில் நிகர ரன் ரேட் பெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தால்?
மும்பை அணியின் பேட்டிங் இரு வீரர்களை மட்டுமே மலைபோல் நம்பியுள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் குவிண்டன் டி காக் ஆகியோர் நடப்பு சீசனில் மும்பை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களின் பேட்டிங் சராசரி 30க்கு மேல் உள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட் ஆகியோர் தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். இருப்பினும், கடந்த ஆட்டத்தை போலவே இன்றைய போட்டியிலும் மும்பை அணி 170 ரன்களை சர்வசாதாரணமாக குவிக்கும். ஏனெனில், இன்றைய போட்டி நடைபெறப் போவது இவர்களது சொந்த மைதானத்தில் என்பதால் மும்பை அணிக்கு சற்று கூடுதல் பக்க பலம் ஆகும்.
கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தால்?
இளம் வீரர் சப்மான் கில், அணியின் தொடக்க வீரராக சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் உருவெடுத்துள்ளார். இவர் தொடக்க வீரராக களமிறங்கிய நான்கு போட்டிகளில் 3 முறை அரை சதத்தை கடந்து உள்ளார். எனவே, அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இவர் இன்றைய போட்டியில் அபாரமாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். மேலும், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான கிறிஸ் லின், ஆந்திரே ரசல், தினேஷ் கார்த்திக் போன்றோரும் பேட்டிங்கில் நம்பிக்கையை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் 180 ரன்களை அசாத்தியமாக குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இன்றைய போட்டியில் யார் வெல்வார்?
சரிசம பலமுடன் விளங்கும் இவ்விரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியிருக்கின்றன. கொல்கத்தா அணிக்கு இன்றைய வெற்றி மிக முக்கியமானதாகும். ஒருவேளை இந்த அணி தோற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பதால், டாஸ் வெல்வதும் முக்கியமான ஒன்றாகும். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாகத் திகழும் வான்கடே மைதானம் சுலபமாக 170 ரன்களை கடக்கக்கூடிய மைதானங்களில் ஒன்றாகும். உள்ளூரில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவார்கள் எனவும் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியுடன் இன்றைய போட்டியிலும் கொல்கத்தா அணி வெற்றி பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.