ஐபிஎல் தொடரானது இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்து ஜொலிப்பதற்கான களமாக விளங்கி வருகிறது. சில பதின்ம வயதில் உள்ள வீரர்கள் கூட மிகப்பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 16 வயதான பிரயாஸ் ராய் பர்மன், பஞ்சாப் அணியில் பிரபு சிம்ரன் சிங் மற்றும் சாம் கரண். இதேபோல், ஐபிஎல்லின் பல்வேறு அணிகளில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் சிலர், ஆடும் லெவனில் இடம் பெற்று தங்களது அணிக்காக விளையாடியும் வருகின்றனர். அவ்வாறு, இந்த இளம் வயதிலேயே ஐபிஎல் அணியில் இடம் பிடித்து விளையாடும் வீரர்களில் எதிர்காலத்தில் சிறக்க உள்ள மூன்று சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.ரியான் பாராக்:

17 வயதேயான ரியான் பாரக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவனில் இணைக்கப்பட்டார். பின்னர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்று இரு போட்டிகளிலுமே தலா 40க்கும் மேல் ரன்களை குவித்தார். இன்னிங்ஸின் பிற்பாதியில் களமிறங்கி விளையாடும் பேட்ஸ்மேனான இவர், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை அளிக்கும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ராஜஸ்தான் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இவர் ஒரு சிறந்த அனுபவ வீரர் போல விளையாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 27.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற வகையில் உள்ளது. எனவே, இனிவரும் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இந்திய சீனியர் அணியில் விரைவில் இடம் பெறுவார் என நம்பலாம்.
#2.ராகுல் சாஹர்:

வலதுகை லெக் பிரேக் சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அற்புதமாக விக்கெட்களை கைப்பற்றி வருகிறார். இவர் இதுவரை இந்திய 19 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளிலும் இந்திய ஏ அணியிலும் விளையாடியுள்ளார். தனது பவுலிங்கில் அவ்வப்போது மாற்றங்களை நிகழ்த்தி விக்கெட்களை கைப்பற்றும் வீரரான இவர், ரசிகர்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பத்து விக்கெட்களை 6.5 என்ற எக்கனாமியுடன் வீழ்த்தியுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக அறிமுகமாகி தனது ஐபிஎல் வாழ்க்கையை 17 வயதில் தொடங்கினார்.
#3.இஷான் கிஷன்:

இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லமை பெற்றவர். இதற்கு முன்னர், நடைபெற்ற ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர வேறு எந்த போட்டியிலும் சரியாக சோபிக்கவில்லை. ஏற்கனவே, மும்பை அணியில் இவருக்கு பதிலாக குயின்டன் டி காக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் களமிறக்கப்பட்டதால் சரியான வாய்ப்புகள் நடப்பு தொடரில் வழங்கப்படவில்லை. உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் தென்ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தனது நாட்டிற்கு திரும்பியவுடன் இஷான் கிஷன் தான் மும்பை அணியின் பிரதான விக்கெட் கீப்பராக திகழ்வார். எனவே, இந்த அணியின் பேட்டிங்கில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. சிறந்த எதிர்காலம் உள்ள இவர், தொடர்ந்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய சீனியர் அணியில் விரைவிலேயே இடம் பிடிப்பார் என நம்பலாம்.