2019 ஐபிஎல் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவிருக்கின்றன. இதுவரை, இவ்விரு அணிகளும் இரண்டு முறை இந்த மைதானத்தில் மோதியுள்ளன. இந்த இரு போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்துள்ளது. இந்த இரு போட்டிகளிலுமே குறிப்பிடும் வகையில், 2013ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பால்க்னரும் 2018 ஆம் ஆண்டில் கனே வில்லியம்சனும் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். எனவே, இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் இந்த மைதானத்தில் செய்துள்ள சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.பேட்டிங் சாதனைகள்:
151 / 7 - 2018 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஐதராபாத் அணி 151 / 7 குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
140 / 6 - 2018 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி குவித்த 140 / 6 என்பது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
98* - 2013 ம் ஆண்டு நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சன் 98 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
4 - இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 4 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் அரை சதம் அடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார், அஜிங்கிய ரஹானே.
4 - இந்த மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சன் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம் அதிகபட்ச சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
13 - இதே ஷேன் வாட்சன், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 13 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதுவே, தனிநபர் அதிகபட்ச பவுண்டரிகள் ஆகும்.
#2.பவுலிங் சாதனைகள்:
5 - 2013ம் ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர் 5 விக்கெட்களை அள்ளினார். இவ்விரு அணிகளுக்கான போட்டியில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.மேலும், அந்தப் போட்டியில் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவ்விரு அணிகளுக்கான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார்.
#3.பீல்டிங் சாதனைகள்:
3 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஜிங்கியா ரஹானே மூன்று கேட்ச்களை பிடித்துள்ளார். இதுவே, பீல்டிங்கில் தனிநபர் அதிகபட்ச கேட்ச்களாகும்.