2019 ஐபிஎல் தொடர் ப்ளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. இதன்படி, நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த இரு அணிகளும் முறையே புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளன. 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்றது, டெல்லி அணி.
சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைவது இது ஐந்தாவது முறையாகும். ஏற்கனவே, முறையே 2013, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. வெளியேற்றுதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அதிகமுறை விளையாடியுள்ளனர். அவற்றில் தலா 2 வெற்றிகளையும் இந்த இரு அணிகள் பெற்றுள்ளன. எனவே, வெளியேற்றுதல் சுற்றில் பல சாதனைகள் அரங்கேற்றப்பட்டுள்ள. அவற்றை இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
187 / 5 - மும்பை அணிக்கு எதிரான வெளியேற்றுதல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இதுவரை உள்ளது.
109 / 10 - 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதுவே, இதுவரை பதிவான குறைந்தபட்ச ஸ்கோராகும்.
106 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரகானே 106 ரன்கள் குவித்து எலிமினேட்டர் சுற்றி அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .
70* - 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வெளியேற்றுதல் போட்டியில் கொல்கத்தா அணியின் ரயான் டென்டஸ்சேட்டே 70 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
10 - இதுவரை இந்தப் போட்டிகளில் 10 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
83 - இதுவரை இந்த 8-வது சுற்றில் 83 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
5 - ஆந்திரே ரசல் மற்றும் பிராட் ஹாட்ஜ் ஆகியோர் தலா 5 சிக்சர்களை அடித்து உள்ளனர்.
12 - மைக்கேல் ஹஸ்ஸி இதுவரை இந்த போட்டிகளில் 12 பவுண்டரிகள் அடித்துள்ளார். இது அதிகபட்ச பவுண்டரிகள் ஆகும்.
பவுலிங் சாதனைகள்:
6 - தவால் குல்கர்னி இதுவரை இந்த போட்டிகளில் 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இது அதிகபட்ச விக்கெட்கள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் சாதனையாகும்.
3 / 19 - 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். வெளியேற்றுதல் போட்டியில் இதுவரை பதிவான சிறந்த பந்து வீச்சாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
3 - தினேஷ் கார்த்திக், தோனி மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் தலா 3 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
3 - ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா மூன்று கேட்ச்களை பிடித்து பீல்டிங் சாதனையில் முன்னிலை வகிக்கின்றனர்.