2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் மற்றும் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின். இதில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா vs ஹைதராபாத்
2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியும், புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. ஹைதராபாத் அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்காததால் புவனேஸ்வர் குமார் அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் பௌலிங்கை தேர்வு செய்தது.
கொல்கத்தா ஆடும் XI:
கிறிஸ் லின், சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், பிரஸித் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன், ப்யுஸ் சாவ்லா.
ஹைதராபாத் ஆடும் XI:
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், யுஸப் பதான், மனீஷ் பாண்டே, ஷகிப் அல் ஹாசன், தீபக் ஹேடா, புவனேஸ்வர் குமார்(கேப்டன்), சந்தீப் சர்மா, ரஷித் கான், சித்தார்த் கவுல்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்ஸ்:
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். முதல் ஓவரை பிரஸித் கிருஷ்ணா வீசினார்.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை டேவிட் வார்னர் வெளிப்படுத்தி விளையாடினார். 1.5வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ்-விற்கு தவறான ரிவிவ்யு கேட்டு தனது ரிவிவ்யுவையும் இழந்தது கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ். பவர்பிளே (1-6 ஓவர்கள்) ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. 8.5வது ஓவரில் டேவிட் வார்னர் தனது 37வது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார்.
அத்துடன் ஐபிஎல் தொடரில் 50+ ரன்களை அடித்தோர் பட்டியலில் டேவிட் வார்னர் 40 முறை 50+ ரன்களை குவித்து முதலிடத்தை பிடித்தார். டேவிட் வார்னருடன் கைகோர்த்து விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 12.5வது ஓவரில் ப்யுஸ் சாவ்லா வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 39 ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரது பார்ட்னர் ஷிப்பில் ஹைதராபாத் அணிக்கு 112 ரன்கள் வந்தது. அதன்பின் விஜய் சங்கர் களமிறங்கினார்.
சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 15.6வது ஓவரில் ஆன்ரிவ் ரஸல் வீசிய பந்தில் ராபின் உத்தப்பா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசியோர் பட்டியலில் டேவிட் வார்னர் 761 ரன்களுடன் முதலிடத்தை பிடித்தார். பின்னர் களமிறங்கிய யூஸப் பதான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 17.3வது ஓவரில் ரஸல் வீசிய பந்தில் 1 ரன்னில் போல்ட ஆனார். விஜய் சங்கர் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் ஆன்ரிவ் ரஸல் 2 விக்கெட்டுகளையும், சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் இன்னிங்ஸ்:
182 என்ற ரன் இலக்குடன் கிறிஸ் லின் மற்றும் நிதிஸ் ராணா கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
1.6வது ஓவரில் ஷகிப் அல் ஹாசன் வீசிய பந்தில் கிறிஸ் லின் 7 ரன்களில் ரஷித் கான்-டம் கேட்ச் ஆனார். அதன்பின் ராபின் உத்தப்பா களமிறங்கி நிதிஷ் ராணா-வுடன் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி முதல் பவர் பிளேவில் 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களை எடுத்தது. 7.3வது ஓவரில் ரஷித் கான் பௌலிங்கில் ராபின் உத்தப்பா கேட்சை தவறவிட்டார் யுஸப் பதான். அதன் பின் நிதிஷ் ராணா மற்றும் ராபின் உத்தப்பா இணைந்து சிறிது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 70 ரன்களை அடைந்தது.
11.4வது ஓவரில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் ராபின் உத்தப்பா போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 35 ரன்களை எடுத்தார். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 12.4வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் புவனேஸ்வர் குமார்-டம் 2 ரன்களில் கேட்ச் ஆனார். நிதானமாக விளையாடிய நிதிஷ் ராணா 12.6 வது ஓவரில் தனது 6வது ஐபிஎல் அரைசத்தை விளாசினார்.
13.1வது ஓவரில் நிதிஷ் ராணாவிற்கு எல்.பி கேட்டு ரிவ்யூ செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தவறாக அமைந்தது. போதிய வெளிச்சமினமையால் 15வது ஓவரில் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு ஆரமித்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிதிஷ் ராணா ரஷித் கான் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் மொத்தமாக 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் சுப்மன் கில் களமிறங்கினார்.
கடைசி 3 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். 18வது ஓவரில் 18 ரன்களையும், 19வது ஓவரில் 21 ரன்களையும் ஆன்ரிவ் ரஸல் அடித்தார். 20வது ஓவரில் சுபமன் கில் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆன்ரிவ் ரஸல் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சுப்மன் கில் 10 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களை எடுத்தார்.
ஹைதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹாசன், சந்தீப் சர்மா, ரஷித் கான், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற ஆன்ரிவ் ரஸல் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.