2019 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் டெல்லி, பெரோஸா கோட்லா மைதானத்தில் மோதிய போட்டியில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. எனவே இதற்கு பதிலடி தரும் விதமாக மேட்ச் 26ல் இந்த இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 12 அன்று மோதவுள்ளன.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 22 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஈடன் கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் கொல்கத்தா அணி 7 போட்டிகளில், டெல்லி கேபிடல்ஸ் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முதல் நேருக்கு நேர்: மார்ச் 30அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் கோட்லா மைதானத்தில் மோதின. இந்த போட்டி பரபரப்பாக சென்று டிராவில் முடிந்தது. இருப்பினும் சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. காகிஸோ ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ்.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் தோல்வியை தழுவியது கொல்கத்தா அணி. இந்த அணிக்கு இந்த சீசனில் இது இரண்டாவது தோல்வியாகும். புள்ளி அட்டவனையில் 2 வது இடத்தில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் உள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ராபி உத்தப்பா
ஆன்ரிவ் ரஸல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். இந்த சீசனில் இவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் 257 ரன்களை குவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராபின் உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் வலிமையான மிடில் ஆர்டரில் களமிறங்கி இந்த சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் விளாசிய ரன்கள் முறையே 183 & 169 ஆகும். சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இருவருமே சொதப்பினர். எனவே இன்றைய போட்டியில் இவர்களது பங்களிப்பு வெளிபடும் என தெரிகிறது. அத்துடன் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோரது அதிரடியையும் அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரைன்
ஆன்ரிவ் ரஸலின் ஆல்-ரவுண்டர் திறன் கொல்கத்தா அணிக்கு பௌலிங்கிலும் உதவுகிறது. இந்த சீசனில் அந்த அணியின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் ரஸல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். ப்யுஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் சுனில் நரைன் தலா 3 விக்கெட்டுகளையும் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளனர். எனவே இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார்கள் என தெரிகிறது.
உத்தேச XI: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபி உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், ஹாரி குர்னே, பிரஸித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக மோதிய முந்தைய போட்டியில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆன்ரிவ் ரஸலை, காகிஸோ ரபாடா தனது வேகத்தில் வீழ்த்தினார். அத்துடன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். எனவே இந்த வெற்றி நம்பிக்கையுடன் டெல்லி கேபிடல்ஸ் இன்றைய போட்டியில் களமிறங்கும்.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: பிரித்வி ஷா, ஸ்ரெயஸ் ஐயர், ரிஷப் பண்ட்
பிரித்வி ஷா கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 99 ரன்களை எடுத்தார். எனவே இந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. அணியின் கேப்டன் ஸ்ரெயஸ் ஐயர் இந்த சீசனில் இதுவரை 215 ரன்களை விளாசி டெல்லி அணி சார்பாக அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.
ஷிகார் தவான் மற்றும் ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிபடுத்தி வருவதால் டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் சில போட்டிகளில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணிக்கு எதிராக இவர்களது சிறப்பான ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு தேவைப்படுகிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, கிறிஸ் மோரிஸ்
காகிஸோ ரபாடா இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் இவரது அனல் பறக்கும் பந்துவீச்சில் டெல்லி கேபிடல்ஸ் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. எனவே இவரது பௌலிங் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ் மோரிஸ் ஆடும் XI-ல் இடம்பெற்றதன் மூலம் அவரது ஆல்-ரவுண்டர் திறன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சிறப்பான முறையில் அளித்து வருகிறார். இந்த சீசனில் 4 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கிறிஸ் மோரிஸ். எனவே கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு சிறப்பான பந்துவீச்சை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
சந்தீப் லாமிச்சனே மற்றும் அமித் மிஸ்ரா டெல்லி கேபிடல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக அசத்தி வருகின்றனர். அத்துடன் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார் என நம்பப்படுகிறது.
உத்தேச XI: ஷிகார் தவான், பிரித்வி ஷா, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், ராகுல் திவேத்தியா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா, டிரென்ட் போல்ட்/சந்தீப் லாமிச்சனே.