“போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே, மோசமான ஃபீல்டர்களுக்குப் பதிலாக சுறுசுறுப்பான ஃபீல்டர்களை மாற்று வீரர்களாக பல ஐபிஎல் அணிகள் களம் இறக்குகின்றன. இந்த நியாயமற்ற நடைமுறையை நடுவர்கள் கவனிக்குமாறு” டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வீரருமான முஹமது கைஃப் கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ள நிலையில், பத்திரிக்கையாளரை சந்தித்த கைஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தான் விளையாடிய காலத்தில் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக திகழ்ந்த கைஃப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “போட்டியின் நடுவில் வீரர்களை மாற்றும் இத்தகைய சந்தேகத்திற்குரிய நடைமுறை குறித்து புகார் தெரிவிக்க எங்கள் அணி தயங்காது. உதாரணமாக, டெல்லி கேபிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் ரஸல் வெளியே சென்றதும் ஃபீல்டிங் பிடிக்க களத்திற்குள் வந்தார் ரின்கு சிங். பின்னர், பியுஷ் சாவ்லா விரைவாக நான்கு ஓவர் பந்துவீசி விட்டு வெளியே சென்றதும், மறுபடியும் ரின்கு சிங் பீல்டிங் பிடிக்க வந்தார்”.
“பஞ்சாபிற்கு எதிரான கடந்த போட்டியிலும் இதை நாங்கள் கவனித்தோம். கிளவுஸில் பந்து தாக்கியதால் சஃப்ராஸ் கான் ஃபீல்டிங் பிடிக்க வரவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்று எனகு தெரியாது. ஆனால், அவருக்குப் பதில் ஃபீல்டிங் பிடிக்க வந்த கருன் நாயர், அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்த இங்கிராமின் கடினமான கேட்சைப் பிடித்து ஆட்டத்தையே திசை திருப்பினார். பல அணிகள் சாமர்த்தியமாக விளையாடி வரும் வேளையில் இதுபோன்ற மாற்றங்கள் எனக்கு சரியாகப் படவில்லை. இதை நிச்சியம் நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.
12-வது ஐபிஎல் தொடர் இன்னும் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது என்றாலும், அதற்குள்ளாகவே “ஸ்லோ ஓவர் ரேட்” என்பது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே ஆகியோருக்கு நேரம் தாழ்த்தி பந்துவீசியதன் காரணமாக 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது.
இதுகுறித்து கூறும் கைஃப், “எதிரணியை எப்படி தங்கள் இலக்கை எட்ட விடாமல் தடுக்கலாம் என நிறைய யோசிப்பதால் இரண்டாவதாக பந்துவீசும் அணி அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்ற திட்டமிடல், போட்டிக்கு முந்தைய நீண்ட நேர வீரர்கள் சந்திப்பு, அதன்பிறகு களத்திலும் நீண்ட திட்டம் தீட்டுதல் போன்றவை எதற்கென்று எனக்கு புரியவில்லை. எங்களைப் போன்ற பயிற்சியாளரக்ள் திட்டமிடலை குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வோம். இல்லையென்றால் குழப்பமாகி விடும்” என்கிறார்.
சன்ரைசர்ஸ் அணி குறித்து அவர் பேசுகையில், “ஹைதராபாத் அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை வெளிப்படுத்த இன்றைய ஆட்டத்தில் நாங்கள் முயற்சிப்போம். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியில் அனைத்து வீரர்களுக்கும் பேட்டிங் பிடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களே எல்லாவற்றையும் முடித்து விடுகிறார்கள். இது ஒரு அணிக்கு நல்லதல்ல. ஆகையால், வார்னரையும் பேரிஸ்டோவையும் பவர்பிளேயில் அவுட்டாக்கி விட்டால், நாங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்றார்.
“இது வழக்கமான் கோட்லா பிட்ச் தான். இங்கு டைமிங் தான் முக்கியம். அது இல்லாவிட்டால் பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாக நேரிடும். இதனால் அணிகள் குறைந்த ஸ்கோரே அடிக்க முடியும். நிச்சியம் இந்த பிட்ச் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை கஷ்டப்படுத்தும்” என நம்பிக்கையோடு பேசுகிறார் முஹமது கைஃப்.