வரும் போட்டிகளில் ஆன்த்ரே ரஸ்ஸல் முன்வரிசையில் களமிறங்க கூடும்: கொல்கத்தா பயிற்சியாளர் காலிஸ் 

Andre Russell (picture courtesy: BCCI/iplt20.com)
Andre Russell (picture courtesy: BCCI/iplt20.com)

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து அசத்தியது. ஆனால் அதன் பின் தொடர்ந்து தடுமாறி வருகிறது. சொல்ல போனால் ஆரம்பத்தில் இருந்தே தட்டு தடுமாறி தான் வெற்றிகளை பெற்று வந்தது. அதற்கு முழுமுதல் காரணம் ஆன்த்ரே ரஸ்ஸலே ஆவார். அவரின் கடைசி கட்ட அதிரடிகளால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று வந்தது. அவருக்கு எந்த பேட்ஸ்மேனும் சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை.

இந்நிலையில் கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஸ்ஸலை முன்னரே களமிறக்காமல் இளம் வீரர் ரிங்கு சிங்கை இறக்கியது கொல்கத்தா அணி. ஒரு பக்கம் கிறிஸ் லின் ஆமை வேகத்தில் ரன்களை எடுக்க ரிங்கு சிங்கும் மந்தமாக ஆடி பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்தார். அதனால் ரஸ்ஸலால் நிறைய பந்துகளை விளையாட முடியவில்லை. கொல்கத்தா அணியால் 159 ரன்களே குவிக்க முடிந்தது. ரஸ்ஸலை 16வது ஓவரில் தான் களமிறக்கியது கொல்கத்தா அணி. ஐதராபாத் அணியின் பந்துவீச்சும் நன்றாக இருந்ததால் ரஸ்ஸலால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு வேளை அவரை முன்னரே களமிறக்கியிருந்தால் அவரால் பந்துகளை கணித்து ஆட சற்று நேரம் கிடைத்திருக்கும். அந்தப் போட்டியில் ரஸ்ஸலை முன்னரே களமிறக்கியிருக்க வேண்டும் என்று கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜேக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

Kallis
Kallis

அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதாக வென்றது. இந்த தோல்வியையும் சேர்த்து கொல்கத்தா அணி தொடர்ந்து ஐந்து தோல்விகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இனிவரும் அனைத்து போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும். இந்நிலையில் இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேக் காலிஸ் கூறியுள்ளதாவது:

‌கடந்த போட்டியில் ரிங்கு சிங் எட்டாவது ஓவரின் போது களமிறங்கினார், ஆனால் ரஸ்ஸலை நாங்கள் அப்போது களமிறக்கியிருக்க வேண்டும். அணியின் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிறைய நெகிழ்வுத் தன்மை வேண்டும். ரஸ்ஸலை முன் வரிசையில் களமிறக்க நாங்கள் எந்த திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தருணம் வந்தால் கண்டிப்பாக அது பற்றி சிந்திப்போம். இது போன்ற சூழ்நிலையில் அணிக்கு என்ன தேவை யாரை எந்த இடத்தில் களமிறக்குவது போன்ற விஷயங்களை அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரே முடிவு செய்கின்றனர். நான் முன்னரே சொன்னது போல ரஸ்ஸல் அல்லது வேறு யாராவது ஒருவரை முன்வரிசையில் களமிறக்கும் நிலைமை வந்தால் கண்டிப்பாக அதை போன்ற வெவ்வேறு விஷயங்களை சற்று வித்தியாசமாக செய்து பார்க்கலாம்.

இவ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வியாழன் அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணியும் இந்த சீசனில் தடுமாறி வருகிறது. இந்த போட்டி இவ்விரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டி ஆகும்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now