இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி ஐத்ராபாதில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இந்த தொடரில் விளையாடிய போட்டியில் ஐத்ராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில் டெல்லி அணி சன்ரைசர்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் ஐத்ராபாத் அணி கேப்டன் கேம் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைந்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். பிரித்திவ் ஷா வந்த வேகத்தில் 4 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கொலின் முன்ரோ நிலைத்து விளையாட கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷிகார் தவண் 7 ரன்னில் கலீல் பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் முன்ரோ உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய கொலின் முன்ரோ 40 ரன்னில் அபிஷேக் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ரிஷப் பன்ட் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவசரப்பட்டு அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து ரிஷப் பன்ட் 23 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக டெல்லி கேபிட்ல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155-7 ரன்களை எடுத்தது.
அதன் பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஐத்ராபாத் அணிக்கு அமைத்து கொடுத்தது. இருவரும் முதல் ஆறு ஓவர்கள் ஆட்டம் இழக்காமல் 40 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் எடுத்து பேர்ஸ்டோ 41 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார்.
அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்னில் அதே கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து நிலைத்து விளையாடிய வார்னர் 51 ராபாடா பந்தில் அவுட் ஆகினார். இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆட்டத்தின் திசை டெல்லி அணியின் பக்கம் மாறியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினார்.
கிரிஸ் மோரிஸ் 18வது ஓவரில் மூன்று விக்கெட்கள் எடுத்து அசத்தினார். டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கீமோ பால் தேர்வு செய்யப்பட்டார்.