2019 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் தோற்கடித்தது, மும்பை அணி. இதன் மூலம், புள்ளி பட்டியலில் எட்டு வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாது, பிளே-ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் 162 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் மணிஷ் பாண்டே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, ஆட்டம் சூப்பர் ஓவர் நோக்கி நகர்ந்து சென்றது.
சூப்பர் ஓவரில் முதலாவதாக ஹைதராபாத் வீரர் மணிஷ் பாண்டே பேட்டிங் செய்ய பும்ரா வீசிய முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகினார். இரண்டாவது பந்தில் மார்டின் கப்தில் ஒரு ரன்னை எடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு விளாசினார், முகமது நபி. நான்காவது பந்தில் முகமது நபியை அவுட் செய்தார் பும்ரா. எனவே, சன்ரைசர்ஸ் அணிக்கான சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது. பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தனது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தார். இவரது முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்சரை அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் பொல்லார்ட் 2 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைத்தது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.பேட்டிங்கில் சுழற்பந்து வீச்சில் தடுமாற்றம் கண்டாலும் வேகப்பந்து வீச்சை நொறுக்கினர்:
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தரோஹித் சர்மா, குயின்டன் டி காக் உடன் இணைந்து இன்னிங்சை ஆரம்பித்தார். சன் ரைசர்ஸ் அணியின் மாறுபட்ட பவுலிங் கூட்டணியால் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று ரன்களை குவிக்க தடுமாறியது. அதுவும், சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்த தவறினர். ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரின் 8 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே இவர்களால் எடுக்க முடிந்தது. இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி 162 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது மும்பை இந்தியன்ஸ்.
#2.தாமதமாக களமிறங்கிய முகமது நபி மற்றும் மணிஷ் பாண்டே:
இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் தமது பேட்டிங்கால் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார், டேவிட் வார்னர்ர். இவர் விளையாடிய 12 போட்டிகளில் 692 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு பதிலாக நேற்று மார்டின் கப்தில் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். விருத்திமான் சஹா உடன் இணைந்து இன்னிங்சை தொடங்கிய மார்ட்டின் கப்தில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த நேரத்தில், ஆல்ரவுண்டர் முஹம்மது நபி ஒருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடி 31 ரன்களை குவித்தார்.
இவரின் அதிரடி தாக்குதல் இன்னிங்சில் இறுதி ஓவர்களில் தான் எடுபட்டது. இவர் ஆட்டமிழந்த பிறகு, மனிஷ் பாண்டே களமிறங்கினார். எனவே, ஒருவேளை இவ்விரு வீரர்களும் முன்னதாகவே களம் இறங்கினால் மும்பை அணி சற்று நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும். இது மட்டுமல்லாமல் ஹைதராபாத் அணி வெற்றியையும் கூட பெற்றிருக்கும்.
#1.சூப்பர் ஓவரில் நடைபெற்ற அற்புதம்:
பும்ரா வீசிய கட்டுக்கோப்பான சூப்பர் ஓவரால் ஐதராபாத் அணியின் வீரர்கள் ரன்களை குவிக்காமல் தடுமாறினர். 4 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து சூப்பர் ஓவரை முடிவுக்கு கொண்டுவந்தனர். பின்னர், களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பாண்டியா மற்றும் பொலார்ட் மும்பை அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டனர்.