ஐபிஎல் போட்டிகள் எப்போதுமே கிரிக்கெட்டில் ஆர்வமும் திறமையும் உள்ள வீரர்களுக்கு நல்ல வாழ்க்கையை அடித்தளமாக அமைத்துக் கொடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு இது மாற்றி உள்ளது என்பது கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம்.
இப்போது மொத்தமாக எட்டு அணிகள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றன. பல்வேறு வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் அந்தந்த அணிகளுக்காக அற்புதமாக விளையாடி தங்கள் திறமையை தங்கள் நாட்டு அணிக்கு காண்பித்து தேசிய அணிகளில் இடம்பிடித்தனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை கணக்கற்ற வீரர்கள் ஐபிஎல்லின் மூலமாக தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் எல்லோர் பெயரையும் இங்கு குறிப்பிட இயலாது. குறிப்பிட்ட சிலரை சொல்ல வேண்டுமானால் ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரிஷப் பண்ட் , ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், அம்பத்தி ராயுடு, முரளி விஜய், சஞ்சு சாம்சன் ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் ஐபிஎல்லை ஏணி படிக்கட்டாக மாற்றி முன்னேறி உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜோஃப்ரா ஆர்ச்சரை சொல்லலாம். அவர் ஐபிஎல்லில் சிறந்து விளையாடி வந்ததால் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்கவுள்ளார். அவருக்கு முன்பாக ஐபிஎல் போட்டிகள் மூலமாக தேசிய அணியில் இடம்பெற்ற முக்கியமான சிலரைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
#1 கீரான் பொல்லார்ட் :
அதிரடி வீரரான கீரான் பொல்லார்ட் டிரினிடாட் அண்டு டொபாகோவில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் பொல்லார்ட் இடம்பெற்றார். அந்தத் தொடரில் நன்றாக செயல்பட்டதால் அடுத்த ஆண்டு நடைபெற்ற இளையோர் உலககோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றார். ஆனால் அந்த உலககோப்பையில் அவர் சரியாக விளையாடவில்லை.
2009 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் அடுத்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பொல்லார்ட்டை தங்கள் அணிப் பக்கம் இழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போட்டி போட்டன. முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட்டை தங்கள் பக்கம் இழுத்தது. பொல்லார்ட் இதுவரை மொத்தம் 144 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 133 இன்னிங்சில் 28.47 என்ற சராசியுடன் 2705 ரன்களை குவித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 83 ஆகும்.
2010 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது உலக அளவில் பல்வேறு டி20 தொடர்களிலும் விளையாடி வருகிறார். 100 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடினாலும் அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.