மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ரோகித் மற்றும் குயின்டன் டி காக் இணை இன்னிங்சை அற்புதமாக தொடங்கி தங்களது பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது. பின்னர், அமித் மிஸ்ரா வீசிய பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரரும் முதல் இந்தியரும் என்ற சாதனையைப் படைத்தார், அமித் மிஸ்ரா. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலையில் இருந்தது. பின்னர், பாண்டியா சகோதரர்கள் மைதானத்தில் நுழைந்த பின்பு ஆட்டத்தில் தங்களது சரவெடி தாக்குதலைத் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து 54 ரன்களை தங்களது பார்ட்னர்ஷிப்பில் கொண்டுவந்தனர். இருபது ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
பின்னர், டெல்லி அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவான் மற்றும் பிரித்திவி ஷா இணை முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களை சேர்த்தது. ராகுல் சாகரின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பை ஆட முற்பட்டபோது ஷிகர் தவான் தனது விக்கெட்டை இழந்தார். இதன் பின்பு டெல்லி அணியின் விக்கெட்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. ராகுல் சாகர் மற்றும் பும்ராவின் அபார பந்துவீச்சு தாக்குதலால் மும்பை அணியின் கை ஓங்கியது. மேலும், டெல்லி அணி பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க முடியாமல் திணறி தங்களது விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை மட்டுமே டெல்லி அணியால் குவிக்க முடிந்தது. மும்பை அணி சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. தனது ஆல்ரவுண்டு ஆட்ட திறனால் மும்பை அணியை வெற்றி பெறச்செய்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் 32 ரங்களையும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியதால் இவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டெல்லி அணியை வீழ்த்தியதால் மும்பை அணிக்கு இரு வெற்றி புள்ளிகள் வழங்கப்பட்டு புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணி விளையாடிய 9 போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகளையும் நிகர ரன் ரேட் 0.44 2 என்ற வகையிலும் அமைந்தது. மறுபுறம், நேற்று தோல்வியடைந்த டெல்லி அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகளோடு புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆட்டத்திற்கு முன்னால் நிகர ரன் ரேட் 0.418 என்ற நிலையிலிருந்து தோல்வியுற்றதால் 0.146 என்ற அளவில் குறைந்துள்ளது. இன்னும் இரு வெற்றிகளை டெல்லி அணி பெற்றால் ஏறக்குறைய தகுதி சுற்றுக்கு முன்னேறும்.
ஆரஞ்சு நிற தொப்பி:
இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மும்பை அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் இந்த தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறினார். டெல்லி அணியின் சார்பில் நேற்றைய போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் ஷிகர் தவான் இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
மேலும், டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று ரன்களை குவிக்க தவறியதால் முதல் 10 இடத்திற்குள் அவரால் வர முடியவில்லை. முதலிடத்தில் எவ்வித மாற்றமும் இன்றி டேவிட் வார்னர்தொடர்கிறார்.
ஊதா நிற தொப்பி:
இந்த ஐபிஎல் தொடரில் தங்களது அபார பந்துவீச்சு தாக்குதலை தொடுத்து வருகின்றனர், டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரான தென்னாப்பிரிக்காவின் ரபாடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இவர் விளையாடிய 9 போட்டிகளில், மொத்தம் 19 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர் ஊதா நிற தொப்பியை பல நாட்களாக தன் வசம் வைத்துள்ளார்.
மும்பையின் சார்பாக பும்ரா நேற்றைய போட்டியில், 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த இரு விக்கெட்களை கைப்பற்றியதால் இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்து எட்டாவது இடத்தை பிடித்தார். இதுவரை இவர் விளையாடிய 9 போட்டிகளில், மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்..