உலக கோப்பை தொடர் முடிந்த உடனே, ஐபிஎல் தொடரின் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் வர்த்தகமாக மும்பை மற்றும் டெல்லி அணியை சேர்ந்த வீரர்களில் இருவர் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்க்கண்டே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் அவருக்கு பதிலாக ரூதர்ஃபோர்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் விளையாட உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து வரும் பிரதான சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்க்கண்டேவின் இடத்தை இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சாகர் கைப்பற்றினார்.
இந்த இரு வீரர்களும் அணி மாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் மயங்க் மார்க்கண்டே-விற்கு நன்றி செலுத்தும் வகையிலும் டெல்லி அணியின் சமூகவலைத்தள பக்கத்தில் இந்த இளம் சுழற்பந்து வீச்சாளரை வரவேற்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்பட்டன. இந்த அணி மாற்றத்திற்கு பிறகு மயங்க் மார்க்கண்டேவின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி.
அவர் கூறியதாவது,
"மிகச்சிறந்த வகையில் அவரது எதிர்காலம் அமைய எங்களது வாழ்த்துக்கள். இது சற்று கடினமான முடிவு தான். இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்துவரும் நட்சத்திரமான இவரை சிறந்த கிரிக்கெட் வாய்ப்பினை கொண்டு விடுவிக்கிறோம். இவர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் அங்கமாகவே இருப்பார்" என்றார்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதுவரவான ரூதர்போர்டின் ஆல்ரவுண்ட் திறமைகள் சிறப்பாக அமையும் எனவும் கூறியுள்ளார், அம்பானி. தற்போது புதிய ஆல்ரவுண்டர் மும்பை அணிக்கு வந்துள்ளது சற்று பொருந்துமா என்ற கேள்வி தான் எழுந்து உள்ளது. ஏனெனில், இந்த அணியில் ஏற்கனவே கீரன் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற மிகச்சிறந்த ஹிட்டிங் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். எனவே, ரூதர்போர்டு அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் ஆகும். மறுமுனையில், டெல்லி அணியில் அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல், சுஜித் மற்றும் ஹனுமன் விகாரி போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்களின் படையே உள்ளதால் அந்த அணியில் மயங்க் மார்க்கண்டே இடம் பிடிப்பது சற்று கடினமான காரியமாகும்.
இருப்பினும் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்னர், இந்த இரு அணிகளும் தகுந்த முடிவுகளை மேற்கொண்டால் அணியில் உள்ள பல வீரர்களை விடுவிக்கலாம். இதன் மூலம், சில தரமான வீரர்களை புதிதாக அணியில் இணைக்கலாம். ஆக்ரோஷமாக திகழும் வீரர்களான மும்பை அணியின் பொல்லார்டு மற்றும் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்கள். ஆல்ரவுண்டர் ரூதர்போர்டு பொல்லார்டுக்கு மாற்று வெளிநாட்டு வீரராக மட்டுமே அணியில் இருப்பார். தனது இறுதிக் கட்ட கிரிக்கெட் வாழ்வில் பயணித்துக் கொண்டிருக்கும் டெல்லி அணியின் அமித் மிஷ்ராவிற்கு மாற்று வீரராக மயங்க் மார்க்கண்டே அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஈராண்டு இடைவெளிக்கு பின்னர் தான், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, முறையை 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் என்னும் தமது பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என மாற்றியுள்ள அணி நிர்வாகத்தின் முடிவால் இம்முறை சற்று முன்னேற்றம் கண்டு 6 ஆண்டுகளுக்குப் பின்னர் பிளே-ஆப் சுற்றுக்கு அடி எடுத்து சாதனை படைத்தது, இந்த அணி. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மார்க்கண்டே அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து டெல்லி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கலாம்.