உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்

Shreyas Gopal
Shreyas Gopal

2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இதுவரை சிறப்பாக அமைந்துள்ளன. பல்வேறு நெருக்கடி சூழ்நிலையும் திறமையாக கையாண்டு பல வெற்றிகளை குவித்து வருகின்றது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. பல்வேறு திறமைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் இருந்தாலும் அனைத்து வீரர்களும் இந்திய அணிக்காக விளையாடுவது சற்று கடினமான காரியம்தான் .கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைய பல வீரர்கள் தவறினர். இருப்பினும், உள்ளூரில் நடைபெற்றுவரும் தொடர்களிலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் களம் காண வாய்ப்பு அளிக்கப்படும். உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூத்த வீரர்கள் சிலர் ஓய்வு அளிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாற்றாக சில இளம் வீரர்கள் அணியில் இடம்பெற காத்திருக்கின்றனர். எனவே, அணியில் அறிமுகம் காண உள்ள மூன்று வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#3.ராஹுல் சஹார்:

Rahul Chahar
Rahul Chahar

2019 ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னை அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை கைப்பற்றிய ராகுல் சஹார், மும்பை அணி பட்டம் வெல்வதற்கு காரணமாய் அமைந்தார். 2019 ஐபிஎல் தொடரில் பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றி தனது பவுலிங் எக்கானமி 6.55 என்ற வீதத்தில் வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு 4 இன்னிங்சில் 14 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவற்றில் குறிப்பிடும் வகையில், முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனையையும் படைத்துள்ளார். இதனால், விரைவிலேயே இந்திய அணியில் இவர் இணைவதற்கான வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

#2.நவ்தீப் சைனி:

Navdeep Saini
Navdeep Saini

நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்ற வேகப்புயல் நவ்தீப் சைனி, 13 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர், 43 ஆட்டங்களில் விளையாடி 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவற்றில் மூன்று முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி அமர்க்களப்படுத்துகிறார். 2017-18 ரஞ்சி சீசனிலும் கூட 8 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை கபளீகரம் செய்து உள்ளார். இவ்வாறு, உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#1.ஸ்ரேயாஸ் கோபால்:

Shreyas Gopal
Shreyas Gopal

கர்நாடகாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக தனது பங்களிப்பை ஆற்றி வருகிறார். லெக் பிரேக் சுழற்பந்து வீச்சாளரான இவர், அணிக்கு இறுதிகட்ட நேரங்களில் தனது பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் ஈராணி டிராஃபிகளை வென்றுள்ள கர்நாடக அணியில் இடம்பெற்று தனது அபார செயல்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து 11 விக்கெட்களை வீழ்த்தி தனது அறிமுகத்தை சிறப்பாக தொடங்கினார். அதன் பின்பு, இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே போட்டியில் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது சர்வதேச வாழ்க்கையும் விரைவிலேயே துவங்க இருக்கின்றது.

Quick Links